banner

நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

அருள்திரு விபுலாநந்தர் அவர்களின் மறைவறிந்து வரலாற்றுப் பேரறிஞர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இயற்றிய இரங்கல் பாடல்!
அருள்திரு விபுலாநந்த அடிகள்


சோழர் வரலாறு என்றவுடன் நம் நினைவுக்கு வரும்பெயர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் என்பதாகும். இவர்தம் வரலாற்றுப் பெருநூல் வெளிவந்த பிறகு பல்வேறு புதினங்கள், திரைப்படங்கள் சோழர் வரலாறு தாங்கி வெளிவந்தன. அந்த அளவு இவர்தம் நூல் தமிழகத்தில் அறிவுப்புரட்சியை உண்டாக்கியது. இவர் பாண்டியர் வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராக இருந்து தமிழ்ப்பணியாற்றிய பெருமகனார். குடந்தையை அடுத்த திருப்புறம்பியம் என்னும் ஊரைச் சார்ந்தவர். திரும்புறம்பியப் போர் வரலாற்று முதன்மை வாய்ந்த போராகும்

கல்வெட்டுப் புலமையும் வரலாற்றுப் புலமையும் இலக்கியப் புலமையும் கொண்ட இவ்வறிஞர் பாட்டுத்துறையில் வல்லார் என்பதை இதுநாள்வரையில் அறியாமல் இருந்தேன். அருள்திரு விபுலாநந்தர் வாழ்க்கை வரலாற்றைத் தேடிக் கற்கத் தொடங்கியபொழுது, விபுலாநந்தர் மறைவையொட்டி இவர் எழுதிய பாடல்கள் என்னை வியப்படைய வைத்தன. என்னே கற்பனை! என்னே அரிய சொல்லாட்சி! என்னே பாட்டுநடை! என்று வியப்புற்றேன். பாட்டு ஆர்வலர்களின் பார்வைக்கு அப்பாட்டுத் தேனமுதைப் படைக்கின்றேன்.


அந்தோ! விபுலாநந்த அறிஞநீ யவனிதுறந் தகன்றா யென்னுஞ்
சிந்தாகுலச்செய்தி செவிமடுக்க யாஞ்செய்பவஞ் செப்பற் பாற்றோ
எந்தாய்நின் னருண்முகத்தை யென்றுகொலோ காண்பேமென் றேங்கி யேங்கி
நந்தாத பெருந்துயருள் நனிமூழ்கி யிஞ்ஞான்று நடுக்குற் றேமால்.

உற்றாரை யான்வேண்டேன் ஊருடன்பேர் வேண்டேனென் றுரைத்தா யந்நாள்
கற்றாரை யான்வேண்டே னெனமொழியு மொருநிலையைக் காணே னென்று
சொற்றாய்நீ கலைஞரெலாந் துயர்க்கடல்வீழ்ந் தரற்றநிலந் துறத்தல் நன்றே
கற்றார்க்கோர் உறுதுணையாம் விபுலாநந் தப்பேர்கொள் கலைவல் லோனே

இந்நாளில் துறவியென இயம்பிடுவோர் எழில்மாடத் தினிதே தங்கி
உன்னாத பொருளில்லை உஞற்றாத செயலில்லை யுன்னைப் போலப்
பன்னாளு மக்கட்குப் பணிபுரிந்து மகிழ்வுற்றோர் பாரில் யாவர்
பன்னாடும் போற்றுமெங்கள் விபுலாநந் தப்பேர்கொள் பாவல் லோனே.

முத்தமிழும் பயின்றிந்நாள் முறையாக வாய்ந்தோர்யார் மொழிமி னென்றோர்க்(கு)
உத்தமநீ யுள்ளாயென் றுணர்த்திமிக விறுமாந்தேம் ஓரா தெம்மை
இத்தலத்தே விட்டகன்றாய் இதுவோநின் றண்ணளிதான் இயம்பாய் ஐயா
வித்தகனே விழுத்தவத்து விபுலாநந் தப்பேர்கொள் மேன்மை யோனே.

எங்கள்தமிழ்த் தாய்க்கந்நாள் எழிற்சிலம்பொன் றளித்தபிரான் இளங்கோ வேந்தன்
துங்கவிபு லாநந்தத் தூயோனா யிவ்வுலகில் தோன்றி முன்னாள்
சங்கமிருந் தாய்ந்தவிசைத் தமிழதனை யாழ்நூலாகத் தந்த பின்னே
புங்கமிகுந் திருக்கயிலை புகுந்ததனால்  மற்றிதனைப் புலங்கொள் வீரே!நன்றி: தமிழ்ப்பொழில் இதழ்

சனி, 27 ஆகஸ்ட், 2016

விபுலாநந்தர் மறைவுக்கு உரைவேந்தர் ஔவை. சு.துரைசாமி பிள்ளை எழுதிய இரங்கற் பாக்கள்!
யாழ்நூல் தந்த விபுலாநந்தர் மறைவுச் செய்தி கேட்டுத் தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்கள் கையற்றுக் கலங்கியுள்ளனர். அவர்களுள் உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய பாக்கள் நெஞ்சை உருக்கும் பாடல்களாக உள்ளன. உரைவேந்தரின் உரைவளம் மாந்திய தமிழுலகம் அவரின் பாட்டமிழ்தம் பருகுவதற்குப் படியெடுத்து வழங்குகின்றேன்.

விபுலாநந்தரின் பன்முக ஆற்றலையும், பண்புநலன்களையும், பைந்தமிழ்ப் பணிகளையும் எடுத்துரைக்கும் உரைவேந்தர் அவர்கள் அகத்தியருக்கும் மேலான ஆற்றலுடையவராக விபுலாநந்தரைப் பரவிப் பாடுகின்றார். நம்மிடமிருந்து பிரித்து, விபுலாநந்தரைக் கொண்டு சென்ற கூற்றுவனை இகழ்ந்துபேச நம்மை அழைப்பதன் வாயிலாக அடிகளார் மேல் கொண்டிருந்த பற்றினை உரைவேந்தர் புலப்படுத்தியுள்ளார்.

வன்சொல்லால் கூற்றுவனை வையலாம் வம்மினோ
இன்சொல்லால் நம்மை இனிதளித்த- தென்முனிக்கு
மேலாம் அருள்விபு லானந்த மாமுனிவிண்
பாலாகச் செய்த பழிக்கு!

என்பது அப்பாடல்.

எண்ணாள ரென்கோமற்(று) எழுத்தாள ரென்கோ
இயலாய தமிழாளர் இசையாள ரென்கோ
கண்ணாளும் விஞ்ஞானக் கலையாள ரென்கோ
கருத்தாளும் செஞ்சொல்லின் கவியாள ரென்கோ
எண்ணாளும் இவ்வண்ணம் எண்ணிமகிழ்ந் தோமை
எண்ணியெண்ணிப் புண்ணாக இனிச்செய்த தந்தோ
தண்ணாளர் அருள்விபுலானந்தர் எங்கள் இறையைத்
தனிக்கொண்டு பிரிவித்த தறமில்லாக் கூற்றே

என்று பாடியுள்ளதில் ஒரு நுட்பம் உள்ளதைக் கவனிக்க இயலும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் அழகினைப் புகழும் கோவலன்,

மலையிடைப் பிறவா மணியே என்கோ
லையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ

என்று பாடுவான். அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் பேரீடுபாடுகொண்ட விபுலாநந்தரை உரிய சொல்லெடுத்து, “என்கோ” என்று உயர்த்திப் பாடியுள்ளமை உரைவேந்தரின் கலையுள்ளத்திற்குச் சான்றாக உள்ளது.